இந்திய வெளிவிவகார அமைச்சர்-அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில்,  அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில்  (UNGA), இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்புக் குறித்து எக்ஸ் தளத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளதாவது,

“அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தேன், இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார் ” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை வெளிவிகார அமைச்சரைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கில் உள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத்தும் சென்றுள்ளார்.

அமெரிக்க நேரப்படி இன்று புதன்கிழமை  (24) பிற்பகல் 3:15 மணிக்கு ஜனாதிபதி பொதுச் சபையில் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.