மாகாண சபைத் தேர்தல் தாமதம்: இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் – தமிழரசுக் கட்சி

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் கூட்டாக வலியுறுத்தினர்.

அத்துடன், இந்திய அரசாங்கத்தினால் காங்கேசன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 63மில்லியன் டொலர்கள் நன்கொடையாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வர்த்தகதுறைமுகமாக செயற்படுத்த முடியாதென அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாட்டையும் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வைத்தியர் சத்தியலிங்கம், துரைராச ரவிகரன், சண்முகம் குகதாசன், வைத்தியர் ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதோடு அர்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு நிலையான சமாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா தனது கரிசனையை வெளிப்படுத்தியமைக்கு நன்றிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், உள்நாட்டில் அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னெடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதனை தொடர்ந்தும் தாமதப்படுத்துவதற்கே முனைந்து வருகின்றது. குறிப்பாக எல்லைமீள் நிர்ணய அறிக்கையை காரணம் காண்பித்து தேர்தலை பிற்போடுவதற்குரிய நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றது.

அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை காணப்படுகின்ற நிலையில், சாணக்கியன் எம்.பியால் கொண்டுவரப்பட்டுள்ள பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றுவதன் மூலமாக உடனடியாக தேர்தலை நடத்த முடியும். ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுதல்களை முன்னெடுக்கின்றது.

மாகாண சபைகளுக்கான மக்கள் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்துவதன் ஊடாகவே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் என்றும் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகரம் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயம் நடைமுறைக்கு வருவது சாத்தியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்கள்.

தொடர்ந்து, காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இந்தியா 63மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளபோதும் தற்போது அரசாங்கம் அத்துறைமுகத்தினை வர்த்தக ரீதியான துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு தயாரில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும் இந்திய முதலீட்டாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்திய முதலீடு;ட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கொழும்பு துறைமுகத்துக்கு தங்களது உற்பத்தியை அனுப்பி அதன்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைப்பதற்கான செலவீனம் தொடர்பில் கரிசனைகளை வெளிப்படுத்தியதோடு காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக தமது முதலீடுகளை விஸ்தரிக்க முடியும் என்றும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த முதலீடுகள் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு வருகின்றபோது இயல்பாகவே அவற்றின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே அந்த விடயத்தில் அரசாங்கம் எதிர்மறையான நிலைப்பாட்டைக் கண்டிப்பதோடு இவ்விடயம் சம்பந்தமாக இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுத்தினர்.

இதனையடுத்து, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு தான் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் சகல மட்;டங்களிலும் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்தியா ஒரு தேசமாக சர்வதேச அரங்கிலும் அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், தொடர்ச்சியாக அந்த விடயத்தினை முன்னெத்துச் செல்வோம் என்றும் துறைமுக அபிவிருத்தி விடயம் சம்பந்தமாக அரசாங்கத்துடன் உரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.