அரசாங்கம் முன்வைக்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது : சாணக்கியன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது.  இந்த ஒருவருட காலப்பகுதிக்குள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று பார்த்தால் ஒன்றுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்று சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள், கொழும்பில் அவசர அவசரமாக சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள்.
ஒருவருட ஆட்சியில் என்ன செய்தீர்கள் என யாரும் கேட்டால் அவமானப்படாமல் இருக்க அவசர அவசரமாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுகள் இதுவரைக்கும் கிடைக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இராணுவ மூகாம்களை விடுவிப்பத்தாக சொன்னார்கள், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதாக சொன்னார்கள் ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த விடயத்திற்கு இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றன.

ஏனெனில் கடந்த கால அரசாங்கங்கள் தங்களால் செய்ய முடியாது என்று வெளிப்படையாகச் சொன்னார்கள்.
ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது எங்களுக்கே அதிக கரிசனை இருப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.