இந்திய – இலங்கை கடற்படைத் தளபதிகள் சந்திப்பு

இலங்கைக்கு  உத்தியோகபூர்வ  பயணம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 21 ) வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் டினேஸ் கே திரிபாதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை சந்தித்துள்ளார்.

இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பான மூலோபாய மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய கடற்படைத் தளபதி இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்த உள்ளார்.

மேலும் இலங்கை கடற்படையால் 12 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு – 2025 இல் பங்கேற்றதன் பின்னர், 2025 செப்டம்பர் 25ஆம் திகதியன்று நாட்டிலிருந்து புறப்பட உள்ளார்.