மின்சாரத் துறை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படாது: ஜனாதிபதி உறுதி

இலங்கையின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமைக்காக  வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், மின்சாரத் துறையின் நிறுவனக் கட்டமைப்பில் உள்ள குழப்ப நிலையைத் தீர்த்து, முறையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் தேவை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை மின் உற்பத்தி நிறுவனம், தேசிய பரிமாற்ற வலையமைப்பு விநியோக நிறுவனம், இலங்கை மின்சார விநியோக நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு இயக்க நிறுவனம் உட்பட புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபை  உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.