சொத்து விபரங்களை வெளியிட்ட அமைச்சர்கள் தொடர்பில் சந்தேகம்!

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரின் சொத்து விபரங்கள் அண்மையில் வெளியான நிலையில் அது முக்கிய பேசுபொருளாக மாற்றம் அடைந்துள்ளது.

குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள பல உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பான கேள்வி அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், தற்போதைய அரசாங்கத்தின் ஆறு அமைச்சரவை அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த ஆறு அமைச்சரவை அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் விரைவில் தகவல் கோரவுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேநேரம், அரசாங்கத்தில் உள்ள ஏனைய மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களும் கோப்புகளும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆறு அமைச்சரவை அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதால், உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் இது குறித்து அவசரமாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த அமைச்சர்கள் எதுவித தொழிலை புரியாமலும், வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், முழுநேர அரசியலில் ஈடுபட்ட நிலையில், இவ்வளவு செல்வத்தை எவ்வாறு பெற்றனர் என்பது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

எனவே, உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் இந்தத் தகவலைப் பெற்ற பின்னர், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெறப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.