காணிப் பிரச்சினையில் அரசியலுக்கு இடமில்லை: அரசாங்கம் தெரிவிப்பு

வடக்கில் யுத்த காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை அரசியல் அனுகூலங்களைப் பெறும் நோக்கில் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது.
வடக்கில் பெரும்பான்மையான மக்கள் ஏனைய கட்சிகளை விட தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்திருக்கின்றனர்.

எனவே அவர்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளை விட எமக்கு பொறுப்புக்கள் அதிகம் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் கூட்டப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, வடக்கில் காணி விடுவிப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் எஸ்.ஸ்ரீதரன் கேள்வியெழுப்பிய போது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் அவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

ஸ்ரீதரன் உரத்த குரலில் கேள்வியெழுப்பிய போது, பதிலளித்த அமைச்சர் பிமல், ‘எனக்கு உங்களை விட உரத்த குரலில் பேச முடியும். உங்களுக்கு தேவையான பிரசாரம் கிடைத்து விட்டதென நினைக்கின்றேன். எனவே தற்போது நான் கூறுவதைக் கேளுங்கள்,’ என்று தெரிவித்தார்.

காணி விடுவிப்பு தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் எங்குமே நேரடியாகச் சென்று காணிகளை விடுவிப்பதில்லை என்றும் இந்த காணி பிரச்சினையை அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்

அந்த காலப்பகுதியில் பாதுகாப்பு காரணிகளுக்காகவே மக்களின் இடங்கள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு பாதுகாப்பு காரணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை பாதுகாப்பு தேவை இல்லாபட்சத்தில் மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருக்கின்றார் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு தாங்கள் செயற்படுவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.