நாட்டிற்கான மேம்பாட்டு கருவியாக புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்!

நாட்டிற்கான மேம்பாட்டு கருவியாக புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025”  பிரதான மாநாடு வியாழக்கிழமை (18) கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் Disrupt Asia 2025, புதன்கிழமை (17)  ஆரம்பமானதோடு செப்டம்பர் 20 வரை நடைபெறும்.

சர்வதேச கவனத்தை ஈர்ப்பதன் மூலம் தெற்காசியாவில் வளர்ந்து வரும் புத்தாக்க மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதே இந்த மாநாட்டின்  நோக்கமாகும். புதிய தொழில்முனைவு  மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு இது சிறந்த பக்கபலமாக இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற பிரதான மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, புதிய தொழில்முனைவோர் கண்காட்சியையும் பார்வையிட்டார்.

நிகழ்வில்  உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, நாட்டிற்கான மேம்பாட்டு கருவியாக புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று  தெரிவித்தார்.“Disrupt Asia 2025”   என்பது நாட்டில் இளைஞர் சமூகத்தை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் சிறந்த பக்கபலம் என்று பிரதி அமைச்சர் கூறினார். இந்தத் திட்டம் நாட்டில் திறமையான தொழில்முனைவோருக்கும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கும் என்றும் தெற்காசியாவில் புத்தாக்கத்திற்கான  நுழைவாயிலாக இலங்கையை நிலைநிறுத்தும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.