திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நாளை (19) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவே இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
இந்நிலையில், பொலிஸார் போராட்டக்காரர்களின் இடத்தை அகற்ற முற்பட்டபோதும் கூட அவர்களால் அதனை அகற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சூரிய மின் சக்திக்கு வழங்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தருமாறு கோரியே இந்தப் போராட்டம் இடம்பெறுகிறது.