எந்தவொரு உள்ளக பொறிமுறையையும் நிபந்தனையின்றி நிராகரிப்பதாக புலம்பெயர் அமைப்புகள் தெரிவிப்பு

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வழிகளை அடிக்கோடிட்டு காட்டி தமிழ் புலம்பெயர் அமைப்புகளினால் கூட்டறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதுடன் அதன் பிரதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை அரச தரப்பால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கான ஆதாரங்களை சேரிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் சுயாதீன சர்வதேச புலனாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஈழத் தமிழர் தாயகத்தின் தனித்துவமான இறையாண்மையையும் சுயநிர்ணய உரிமையையும் தீர்க்கப்படாத காலனித்துவ பிரச்சினையாக அங்கீகரிக்கும் வகையிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது ஐ.நா.வின் வாக்கெடுப்பின் ஊடாக உச்சத்தை அடையும். அத்துடன் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தமிழ்நாட்டின் மூலோபாய புவிசார் அரசியல் முக்கியத்துவம் மற்றும் இந்த நோக்கங்களை முன்னெடுப்பதில் உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோரின் கொள்கை ரீதியான பங்களிப்பு என்பன தொடர்பிலும் குறித்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் விடுத்துள்ள அறிக்கை தொடர்பிலும் குறித்த அறிக்கையில் கருத்துரைக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை உள்ளக பொறிமுறையை மையமாக கொண்டுள்ளமை தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அதற்கு கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இவ்வாறான உள்ளக பொறிமுறை என்பது குற்றவாளிகளை பாதுகாத்து,பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுவதையும் குறிக்கிறது என்றும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தனித்து அல்லது கலப்பின முறையிலான எந்தவொரு உள்நாட்டு செயல்முறையையும் திட்டவட்டமாக நிபந்தனையின்றி நிராகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.