மட்டக்களப்பு மேய்ச்சல்தரை அபகரிப்பு  சிங்கள மக்கள் பிரதிநிதித்துவத்துக்கான ஆரம்பப்புள்ளி: – பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் மாடுகள் மேயும் மேய்ச்சல் தரை போராட் டம் கடந்த பலவருடங்களாக இடம் பெற்றும் எந்த நீதியும் இன்றி மேய்ச்சல்தரை பிரச்சினை இனி இல்லை என்றது போன்ற மாயை, தோற்றப்பாடு உள்ளது.
ஆனால் இதுவரை கடந்த கால அரசுகளால் ஏமாற்றப்பட்டு கடந்தகால 2024, ஜனாதிபதி தேர்தல்காலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தியும் வாக்குறுதிகள் மட்டுமே பண்ணை யாளர்களுக்கு வழங்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்ட வரலாறே உள்ளது. மாடுகளுக்கான  மேய்ச்சல்தரை பிரச்சினை எந்த அரசு ஆட்சியில் அமர்ந்தாலும் அது தீர்க்கப்படவில்லை.
இதனால் மீண்டும் மட்டக்களப்பு பண் ணையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக பண்ணையாளர் ஒருவர் தெரிவித்தார். கவன ஈர்ப்பு போராட்டத்தை தொடங்குவதை விட வேறுவழியில்லை எனவும் அரசியல் வாதிகளால் தாம் நம்பி ஏமாற்றப்பட்டுள்ளோம் எனவும் மன வருத்ததுடன் பல பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுவருகிறார்கள்.
மட்டக்களப்பு பொலன்னறுவை எல் லைப் பிரதேசமான மயிலத்தமடு பெரிய மாதவனை பிரதேசத்தில்
மேய்ச்சல்தரை பகுதியில் கால்நடை பண்ணையாளர்களை அச்சுறுத்தி மாடுகளை வெட்டி அவர்களை பரம்பரையான மேய்ச்சல்தரையில் இருந்து ஓடவைப்பதற்காக முழுமூச்சான திட்டம் என்பது கடந்த கால ஆட்சியாளர்களால் சிங்களவர்களைக்கொண்டு  மேற்கொள்ளப்பட்டு  அங்கு அவர்களை குடியேற்்றி எதிர் வரும் காலங்களில் மட்டக்களப்பில் இருந்து சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் ஆரம்ப புள்ளியாகவே மட்டக்களப்பு மேய்ச்சல்தரை அபகரிப்பை நோக்க முடிகிறது.
கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் பிரதிநிதிகள் இன்றி தப்பிக்கிடக்கும் ஒரே மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே திருகோணமலை,அம்பாறை ஆகிய மாவட்டங்க ளில் இப்போது சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் களின் பிரதிநித்துவம் உள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்ததாக கூறப் படும் 1948ல்  பெப்ரவரி 04 தொடக்கம் 1960 மார்ச் 20 பொதுத் தேர்தல் வரை 12 வருடங்களாக வடகிழக்கில் எந்த ஒரு மூலையிலும் இருந்து சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாக வில்லை. 1960 ஜூலை 20 ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில்தான் அம்பாறைத்தொகுதியில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலமாக விஜயசிங்க விஜயபாகு என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் தெரிவானார். அன்றுதான் வடகிழக்கில் இருந்து முதல் முதலாக சிங்களவர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான வரலாறாகும்.
1961 ஏப்ரல் 10 ல் மட்டக்களப்பு மாவட் டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் உருவானது. அதற்கு முன்னம் மட்டக்களப்பு மாவட்டமாகவே அம்பாறை கிராமங்கள் இணைந்திருந்தன. 1961 தொடக்கம் 1978  வரையும் அம் பாறை மாவட்டம் என அழைக்கப்பட்டது ஆனால் 1978- செப்டம்பர் 07 ல் புதிய அரசில் யாப்பு உருவாக்கப்பட்டு 22 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டபோது அம்பாறை என்ற பெயர் காணாமல் போய் “திகாமடுல்ல” என்ற சிங்களப் பெயர் அம்பாறை மாவட்டத்துக்கு சூட்டப்பட்டது இதுவும் ஐக்கிய தேசிய கட்சி ஜே.ஆர்.ஜெயவர்தன செய்த சதியாகும் அப்போது எந்த தமிழ், முஷ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அம்பாறை என்பதை திகாமடுல்ல என மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஏன் என்பது தெரியவில்லை.
அம்பாறையில் உள்ள நான்கு தொகுதிக ளான அம்பாறை, சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை இதில் ஒரு பெயரை மாவட்டத்துக்கு  பெயராக வைப்பதற்கு அப்போது தமிழ், முஷ்லிம் அரசியல் வாதிகள் தவறிவிட்டனர் என்பதே உண்மை.
1977 யூலை 21 ல் நடைபெற்ற தேர்தலில் தான் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில எனும் தொகுதி உருவாக்கப்பட்டு எச்,அடா.லீலாரெட்டண என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் தெரிவானார் அதற்கு முன்னம் திருகோணமலையில் எந்த சிங்கள பிரதிநித்துவமும் இல்லை. 1989 பெப்ரவரி 15  தேர்தலானது முதலா வது விகிதாசாரத்தேர்தல் இதில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநித்துவம் உறுதியானது ஆனால் 1994 ஆகஸ்ட்16 ல் நடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 06 ஆசனங்களில் 04 சிங்களவரும் 02 இஷ்லாமியரும் பாராளுமன்ற உறுப்பினரானார்கள்.
இறுதியாக 2024 நவம்பர் 14 ல் நடைபெற்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 07 உறுப் பினர்களில் 03 சிங்களவர் 03  இஷ்லாமியர் 01 தமிழர் தெரிவானார்கள். திருகோணமலையில் இருந்து 04 ஆசனங்களில் 02 சிங்களவர் தெரிவாகியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திரு கோணமலையில் சிங்கள பாராளுமன்ற உறுப் பினர்கள் தெரிவாகும் நிலைக்கு திட்டமிட்ட சிங்கள குடியேற்றமே மூலகாரணம். அதில் இன்று 2025 வரையும் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே சிங்கள பாராளுமன்ற உறுப்பினரகள் தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லை.
இதனை உணர்ந்த கடந்தகால மகிந்தராஷ பக்‌ஷ அரசின் திட்டம்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைகளான மயிலத்தமடு, மாதவனை பிரதேசங்கங்களில் சிங்களவர்களை குடியேற்றும் திட்டமாகும்.
அவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்திலும் சிங்கள மக்களை குடியேற்றம் செய்து மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க கூடிய ஒரே இடம் மட்டக்களப்பில் உள்ள மேய்ச்சல் தரைகளான  மயிலத்தமடு, மாதவனை பிரதேசங்களாகும்.
மயிலத்தமடு மாதவனை பகுதியில் பொல நறுவை, அம்பாறை , மொணறாகலை பகுதிகளை சேர்ந்த சிங்களவர்கள் அத்துமீறி மீண்டும் அந்த மேய்ச்சல் தரைகளில் பயிர்செய்கையில் ஈடுபடு வதை காணமுடிகிறது.
பேசிப் பார்த்தோம், நீதிமன்றில் வழக்குப் போட்டோம், தொடராக கவன ஈர்ப்பு போராட் டங்களை செய்தோம் எந்த பயனும் இல்லை கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜீத்துக்கு ஆதர வாக வாக்களியுங்கள் என்று தமிழரசுக்கட்சி பாராளு மன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார் அவருடைய கதையை நம்பி வாக்களித்தோம் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக தெரிவாகவில்லை இருந்தும் அவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார் அவர் இதுவரை மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பற்றி வாயே திறக்கவில்லை எனவும் பண்ணையாளர்கள் ஆதங் கப்பட்டனர்.
மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் மேய்ச்சல் தரையாக காணப்படும் இடங்கள் ஏற்கனவேஅடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவின் ஈரளைக்குளம் கிராம சேவையாளர்பிரிவில் 6383 ஹெக்டெயரும், கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் குடும்பிமலை கிராம சேவையாளர் பிரிவில் 9969 ஹெக்டெயர் முன்மொழியப்பட்டுள்ளன.
இருப்பினும் அது வர்த்தமானி அறிவித் தலாக வெளியிடப்படவில்லை. குறித்த எல்லைப் பிரதேசங்களில் அம்பாறை மற்றும் பொலன் னறுவை மாவட்டங்களில் இருந்து அத்துமீறிக் குடியேறுபவர்களது நெருக்கு வாரங்களை தாங் கிக்கொண்டு வாழ்வாதாரத்துக் காக காலம்கடத்தும் நிலையில் மட்டக்களப்பின் பண்ணையாளர்கள் இருப்பதாக கவலை வெளியிடப்படுகிறது.
சுதந்திரம் அரசியல் உரிமை கேட்டு போராடிய ஈழத்தமிழர்கள் இப்போது மட்டக் களப்பில் மேய்ச்சல் தரைக்காகவும், மன்னாரில் காற்றாலை தடுப்புக்காகவும், திருகோண மலை யில் சூரியசக்தி மின்திட்டத்திற்கு எதிராகவும், கல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரியும், யாழ்ப்பாணத்தில் செம்மணி படுகொலைக்கு சர்வதே நீதி கோரியும், முல்லைத்தீ வில் மாவீரர் துயிலும் இல்லக்காணியை விடுவிக்க கோரியும்,பல கோணங்களில் போராட்டமே வெவ்வேறு விடயங்களுக்காக நடைபெறும் நிலைமை ஈழத்தமிழர்களுக்கு கடந்த 16 வருடங்க ளாக தொடர்கிறது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக சர்வதேச நீதிவேண்டி ஏறக்குறைய ஐயாயிரம் நாட்களை எட்டும் தொடர் போராட்டம் வடகிழக்கில் எட்டுமாவட்டங்களிலும் போது வான ஒரு போராட்டமாகவும் தொடர்கிறது. முடிவில்லாத, தீர்வு இல்லாத போராட்டங்களே ஈழத்தமிழர்களின் வாழ்வு நிலையாக மாறிவிட்டது என்பது மட்டுமே உண்மை.