பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர யுத்த குற்றங்களில் ஈடுபட்டாரா? என்பதை அறிவதற்கு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலே உண்மைகள் வெளிவரும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை. போரின் போது நிகழக்கூடாத சில விடயங்கள் நடந்திருக்கலாம்” என பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்கள் இலங்கையில் நடக்கவில்லை என கூறுவது ஒரு அப்பட்டமான பொய். செம்மணிப் புதைகுழி விவகாரம் என்பதுவே ஒரு யுத்தக் குற்றமாகும்.
அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதுவே ஒரு யுத்த குற்றம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதுபோல வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
யுத்தத்தினுடைய இறுதி நாட்களில் பாதுகாப்பு வலயம் எனக் கூறிவிட்டு மக்களை அந்த பாதுகாப்பு இடத்திற்கு செல்லுங்கள் என கூறிவிட்டு அங்கு மோட்டார் குண்டு மூலம் தாக்கியும், வேறு பல்வேறு விதமான முறைகளில் தாக்கியும் அந்த மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
இது சர்வதேச ரீதியாக எல்லோரும் ஏற்றுக் கொண்ட விடயம். அதுவே மிகவும் பாரதூரமான ஒரு யுத்த குற்றம் என்று அவர் தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் அருண ஜயசேகர முதலில் இராணுவத்தில் இருந்ததனால் அவர் யுத்த குற்றம் இடம்பெறவில்லை என்றுதான் கூறுவார். அவரைப் பொறுத்தவரை அவர் இராணுவத்தை பாதுகாக்க வேண்டும், முப்படையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே உள்ளார்.
அவர் ஏற்கனவே இராணுவத்தில் இருந்ததனால் அவருக்கும் இப்படியான தொடர்புகள் இருக்குமோ இல்லையோ எமக்கு தெரியாது. ஆகவே அது குறித்து அவரிடம் முழுமையான விசாரணை செய்தால்தான் உண்மை வெளிப்படும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
யுத்தக்குற்றம் புரிந்தவர்களே அந்த விசாரணையை செய்யக்கூடாது. அப்படி அவர்களே அந்த விசாரணையை செய்தால் நிச்சயமாக மக்களுக்கு நீதி கிட்டாது என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.