பழைய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் பரிசீலனை

பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக எல்லை நிர்ணய செயல்முறை முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது. எனினும், புதிய எல்லை நிர்ணய செயல்முறையானது, சிக்கலானது மற்றும் நீண்டது என்பதால், அடுத்த தேர்தலை, 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ் நடத்த ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாமதமின்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்த திட்டத்தை அரசாங்கம் பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது, இந்திய பிரதிநிதி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஒட்டுமொத்த ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்குள் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கான தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை ஆதரிப்பதே இந்தியாவின் அணுகுமுறையாக இருந்து வருகிறது.

இலங்கை அரசியலமைப்பை முழுமையாகவும் திறம்படவும் செயல்படுத்தவும், மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்தவும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கும் இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுப்பதாகவும் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் அனுபமா சிங் குறிப்பிட்டிருந்தார்.