ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 20வது ஆண்டில் அதன் அறுபதாவது அமர்வு சிறிலங்காவின் ஈழத்தமிழன அழிப்பு-துடைப்பு-பண்பாட்டு இனஅழிப்பு என்பவற்றுக்கான தண்டனைநீதி, பரிகாரநீதி என்பவற்றை சிறிலங்காவின் நீதிவழமைக்குள்ளேயே உள்ளகப்பொறிமுறைக்குள் நடைமுறைப்படுத்த சிறிலங்காவின் இன்றைய அரசாங்கத்துக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்து அனைத்துலக நிதியும் மதிப்பும் அதற்கு அளிக்கும் செயற்திட்டத்தையே முதன்மைப்படுத்தியுள்ளது.
ஆனால் சிறிலங்காவின் நீதிவழமை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை இல்லாத அரசியலமைப்பை எழுதப்பட்ட அரசியலமைப்பாகக் கொண்டது. 1972 மே மாதம் 22 முதல் இன்று வரை அரைநூற்றாண்டுக்கு மேலாக 53 ஆண்டுகள் இந்த பக்கச் சார்பான நீதிவழமையே செயற்பட்டு வருகிறது என்பது உலகறிந்த உண்மை. இதனால் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் 1948 முதல் இனஅழிப்பை முன்னெடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதப் பெரும்பான்மையினரின் படைபலம் வழியாக தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் இனங்காணக் கூடிய அச்சத்துடன் பாராளுமன்றக் கொடுங்கோன்மை வழியாக அடக்கப்படும் ஒடுக்கப்படும் அரசற்ற தேசமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதுவே ஈழத்தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கான மூலகாரணம்.
ஆனால் இந்த அணுகுமுறையில் மனித உரிமைகள் பேரவை ஈழத்தமிழர் மனித உரிமைகள் பிரச்சினைகளை அணுகாது சிறிலங்கா என்னும் அரசினை பொறுப்புக்கூற வைப்பதன் மூலம் அதன் இறைமையை அதனால் ஆட்சிப்படுத்தப்படுபவர்களுடன் இணக்கப்படுத்தி அது வலுவான அரசாக செயற்பட வைப்பதற்கான அனைத்து நெறிப்படுத்தல்களையும் மனித உரிமைகள் பேரவையின் 2025ம் ஆண்டுக்கான சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த அறிக்கை செய்துள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் அவர்கள் உலக இனமாக வாழும் அனைத்து நாடுகளிலும் ஈழத்தமிழர் மனித உரிமைகளைத் தொடர்ச்சியாகப் பேணவல்ல செயலணிகளை அமைத்து உறுதியுடன் சனநாயக வழிகளில் போராடுவதன் மூலமே தங்களின் இறைமையைப் பேண வேண்டிய காலத்தின் தேவை உள்ளவர்களாக இன்று உள்ளனர். இது மனித உரிமைப்போராட்டம் அரசியலுக்கு கட்சிகளுக்கு அமைப்புக்களுக்கு அப்பாற்பட்ட மக்களின் போராட்டம்.
இதற்கு அனைத்துலக இன்றைய உலக அரசியல் முறைமைகள் அனைத்துலக நாடுகளின் சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக மாற்றங்களின் நோக்குகள் போக்குகள் குறித்த தெளிவான சிந்தனைகளை வழங்கவல்ல சிந்தனைச் செயலணிகள் முதற் தேவை.
அடுத்து இந்த இன்றைய சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக எதார்த்தங்களில் எவ்வாறு ஈழத்தமிழர்கள் தங்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக வலுக்களை வளர்க்க வல்ல அறிவார்ந்த அணுகுமுறைகள் உடன் செயல்பட வல்ல செயலணிகளை அமைத்தல் அவசியம்
இவை இரண்டும் நிபுணத்துவமும் அனுபவமும் மிக்கவர்களின் வழியாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கு மாணவர்கள் ஆசிரியர்கள் தொழிலாளர்கள் மக்களின் நாளாந்த வாழ்வுக்குப் பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்குபவர்கள் மக்கள் பணி நாட்டுப்பணி செய்யும் ஆன்மிகவாதிகள் சிந்தனைவாதிகள் அனைவரும் உள்ளடக்கப்பட வேண்டும். இதனையே சிவில் சமூகங்களின் இணைப்பு என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு உழைப்பாளரதும் தேவைகள் பயிற்சிகள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டாலே அவற்றைத் தீர்த்து வைப்பதன் மூலம் ஒருங்கமைந்த சமுகத்தைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு மண்ணின் வளங்களின் பாதை வரைபு மிக முக்கியமானது. ஊரின் தன்மை தெரிந்தவர்களும் அவற்றை வலுப்படுத்தக் கூடிய பல்கலைக்கழக அறிவாற்றலுள்ளவர்களும் இணைந்து இந்த ஈழத்தமிழர் தாயகத்தின் உட்கட்டுமானங்களையும் ஈழத்தமிழர்களின் ஆற்றல்களின் இருப்புக்களையும் இனங்கண்டு இதனைச் செய்தாலே அதனை உலகச் சந்தை பயன்படுத்துவதற்கான தூண்டல்களை ஏற்படுத்த இயலும்.
இத்துடன் இளையவர்கள் இன்று உள்ள அவர்களின் உளநிலைக்கு எற்ப இந்தச் செயலணிகளில் தங்களின் கருத்துக்களை எண்ணங்களைச் செயலாக்க வல்ல செயற்திட்டங்களை அமைக்கும் ஆற்றல் ஒவ்வொரு செயலணிக்கும் அளிக்கப்பட வேண்டும்.
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லையென்ற அனுபவத்தின் அடிப்படையில் பெண்கள் தங்களின் வாழ்வியல் வளர்ச்சிக்கான சுதந்திரமான தீர்மானங்களை எடுக்க வல்லவர்களாக உறுதிப்படுத்தக்கூடிய வகையில் இந்தச் செயலணிகள் செம்மைப்படுத்தப்படல் அவசியம்.
இவற்றைச் செய்வதற்கான அறிவியல் தொழில்நுட்ப தளங்களை இணைத்தல் என்பது இன்றைய செயற்கை நுண்ணறிவுக்காலத்தின் கடமையாக அமைகிறது. இதற்கு அனைத்துலக அறிவுலகின் இணைப்பு என்பது உலகத் தமிழர்களால் பயிற்சிகள் முயற்சிகள் வழி செய்யப்பட வேண்டியதாகிறது.
இவற்றை எல்லாம் செயற்படுத்துவதற்கு நிதி முகாமைத்துவம் அடித்தளமாகவுள்ளது. ஒரு அரசாக இல்லாத நிலையில் மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களை நடாத்துவதற்குச் சமூக மூலதனமே துணையாக அமையும். இதனை முறைமையான வங்கி அமைப்பின் மூலமே நடைமுறைக்குக் கொண்டு வர முடியும்.
இந்த எண்ணங்களையும் நாளாந்த வாழ்வையும் மக்களையும் இணைப்பதற்குப் பலம் வாய்ந்த ஊடகக்கட்டமைப்பு காலத்தின் தேவையாகிறது.
இவ்விடத்தில் இன்று சிறிலங்காவில் உள்ள ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரங்களை தமதாக்கும் போக்குகளும் படைபலம் கொண்டு ஆளும் நோக்குகளும் இவற்றுக்கு இடங்கொடாது என்பது வெளிப்படையான உண்மை.
அப்படியானால் எப்படி இவற்றைச் செய்வது என்பதற்கு இலங்கைத் தீவில் உள்ள மக்களுக்கு ஈழத்தமிழர்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக வாழ்வின் உண்மையான வளர்ச்சிகள் பாதிக்கப்படும் பொழுது அவர்களின் தளர்ச்சிகளும் வீழச்சிகளும்; இணைந்தே ஏற்படும் என்கின்ற உண்மை தெளிவாக்கப்படல் வேண்டும். உரையாடல்கள் மூலமே இதனை முன்னெடுக்க முடியும்.
தப்பிப்பிழைக்கும் பொறிமுறைக்குள் சிறிலங்காவிடமே நாளாந்த வாழ்வின் இருப்புக்கான தேவைகளைப் பெற வேண்டிய நிலையில் ஈழத்தமிழர்கள் வாழ்வதால் ஈழத்தமிழர்களைத் தனது குடிகளென அவர்களின் வரிப்பணத்தையும் ஆற்றல்களையும் அறிவையும் தனது நிதியாக்கத்திற்கும் வளர்ச்சிகளுக்கும் பயன்படுத்தி வரும் சிறிலங்கா அரசாங்கத்துடனும் மக்களின் பாதுகாப்பு தேவைகள் வளர்ச்சிகள் குறித்து பேச வேண்டிய நிலையுள்ளது. இதனை அரசியலுக்கு அப்பால் முன்னெடுக்கக் கூடிய செயலணிகளும் இன்றைய தேவையாக உள்ளன என்பது நடைமுறை எதார்த்தமாக உள்ளது.
அவ்வாறே இந்தியத்துணைக்கண்டத்தின் பிரிக்க இயலாத நிலப்பரப்பாகவும் இந்துமாக்கடலின் முக்கிய கரையோர நாடாகவும் உள்ள ஈழத்தமிழரின் தாயகத்தின் இருப்புநிலை பிராந்திய மேலாண்மைகளதும் அனைத்துலக வல்லாண்மைகளின் இலக்காக ஈழத்தமிழர் தாயகத்தை அமைக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த உலக சத்திகளுடனான ராஜதந்திர அணுகுமுறையும் மண்ணினதும் மக்களினதும் விருப்பின் அடிப்படையில் அது அமைவதும் அவசியமாகிறது. இன்று இவ்விடயத்தில் ஈழத்தமிழர்களின் இயலாமை இந்த வல்லாண்மைகள் மேலாண்மைகளின் அக்கறைக்குரிய அரசாக சிறிலங்காவை முன்னிறுத்தி வருகிறது.
மிகப்பரந்த அளவிலும் மிக வலிமையானதாகவும் செயலணிகள் பல தேவைகளுக்கு ஏற்பக்கட்டமைக்கப்பட்டு அவை எல்லாவற்றிலும் மனித உரிமைகள் என்னும் அனைத்துலகத்தாலும் பேணப்பட வேண்டிய உரிமைகள் எந்த அளவுக்குப் பேணப்படுகிறது என்ற மதிப்பாய்வுகள் தெளிவாக்கப்படும் பொழுது அது இயல்பாகவே மனித உரிமைகள் செயலணிகள் தோற்றம் பெறவும் வலுப்பெறவும் உதவும் என்பது இலக்கின் எண்ணம்.
எவ்வளவு செயற்பாடுகள் விரிந்து கிடக்கின்றன. ஆனால் எப்படி நடைமுறையில் விதண்டா வாதங்களும் வெட்டிப் பேச்சுகளும் பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வளர்த்து வரும் இனமாக ஈழத்தமிழினம் உள்ளது என்பதை எண்ணிப்பார்த்து. நாம் நேருக்கு நேர் உரையாடி உறவாடுவோம். அதன்வழி ஒரு தலைமை ஒரு நோக்கு ஒரு போக்கு என்பதை உறுதியாக்குவோம். இது இயலாதென்பதில்லை. சிந்தித்தால் எந்த செயலையும் வெற்றியானதாக மாற்றும் ஆற்றல் கொண்டவன் மனிதன். இந்த உண்மையின் அடிப்படையில் கருத்தியல் மாற்றத்துக்கு முயன்றால் வெற்றி ஈட்ட முடியும் என்பதே இலக்கின் உறுதியான எண்ணம்.
இன்று மாறிவரும் உலக சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக சூழ்நிலைகள் ஈழத்தமிழரின் ஒருமைப்பாட்டுடன் கூடிய முயற்சியால் அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை மீளுறுதி செய்யக்கூடிய சந்தர்ப்பங்களை நிறையக் கொண்டுள்ளன. செயலணிகளை அமைப்போம். அதனை ஆளணிகளால் பலப்படுத்தி உழைப்போம் நிச்சயம் வெற்றி நமதாகும் என்பது இலக்கின் உறுதியான எண்ணம்.




