இந்திய தூதுவருக்கும் ரெலோவுக்குமிடையே சந்திப்பு!

கொழும்பில் உள்ள இந்திய  தூதுவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (11)  இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர்.

அதன்போது செப்டம்பர் 8ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமை 60 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தமிழர்களின் அபிலாசைகளான  அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, நீதி, கௌரவம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தாம் வரவேற்பதாக ரெலோ தலைவர் தெரிவித்தார்.

அரசியல் யாப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலே விரைந்து மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியமை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படும் மாகாண சபை தேர்தலை நடாத்த வழிவகுக்கும் எனவும் உயர்ஸ்தானிகரிடம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபாய்களை வழங்கி அப்பிரதேச மக்களின் நீண்ட கால சுகாதாரத் தேவையை நிறைவு செய்ய இந்தியா முன்வந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை காங்கேசன்துறை  துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து என்பவற்றில் இந்தியா தொடர்ந்தும் அக்கறையுடன் இருப்பதாகவும் விரைந்து அதை நிறைவேறுவதற்கான தொடர் முயற்சிகள் எடுக்கப்படுதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதும் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதும் சமாந்தரமாக செயல்படுத்தப்படுவது அவசியம் எனவும் அதில் இந்தியா அக்கறையோடு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றில் இந்தியா இதய சுத்தியோடும் உறுதியோடும் பயணிப்பதற்கு தமிழ் மக்கள் சார்பில் தாம் நன்றி கூறுவதாக ரெலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.