மன்னார் காற்றலைத் திட்டத்துக்கு ஜனாதிபதி வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவு

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்படும் விடயம் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஒரு மாத காலக்கெடு இன்றுடன் (12) நிறைவடைகின்றது.

இந்தநிலையில், ஜனாதிபதியின் சாதக பதிலை தாம் எதிர்பார்த்துள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் காற்றாலை, கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் இன்று 41ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அங்கு இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மன்னார் மக்களின் இருப்பிடங்களையும் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் இன்று 41ஆவது நாளை கடந்து செல்கின்றது.
ஜனாதிபதியின் அலுவலகத்தில் இருந்து தங்களின் போராட்டத்தின் பலனாக நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து கனிம மணல் அகழ்வும் முன்னெடுக்கப்படக்கூடாது. இதுவரை அரச தரப்பில் இருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இது, நாட்டுக்கான போராட்டம். நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்கான போராட்டம் என்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் தெரிவித்துள்ளார்.