இலங்கையிலும் இளைஞர்கள் கிளர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை: தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை

நேபாளத்தில் வெடித்த கலவரத்தைப்போன்று. இலங்கையிலும் அரசுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- நேபாளத்தில் இலங்கையில் அரகலயவின்போது நடைபெற்ற சம்பவங்களே முதலில் காண்பிக்கப்படுகின்றன. ஜனாதிபதி மாளிகை கையகப்படுத்தப்பட்டமை, அங்கு அரங்கேற்றப்பட்ட சம்பவங்கள். நீச்சல் தடாகத்தில் குளித்தமை. ஜனாதிபதியின் கட்டிலில் படுத்தமை போன்ற நாட்டை நாசமாக்கிய காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. என்றாவது ஒருநாள் மக்கள் அதற்கு எதிராகத் திரும்பி, உங்களைத் (தேசிய மக்கள் சக்தியினரை ) தாக்குவார்கள். அந்தக் காலம் வரும்போது உங்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களைத் தான் முதலில் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். எமக்குப் பிரச்சினை இல்லை. நாம் எதற்கும் தயார். இன்று இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். பட்டதாரிகளுக்கும் வேலை இல்லை. எனவே அவர்கள் கிளர்ந்தெழுவார்கள். அதற்குரிய நாள் தொலைவில் இல்லை – என்றார்.