இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறினர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நேற்று (10) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதற்கு அமைய இந்த செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு – விஜேராம இல்லத்தில் இருந்து இன்று (11) வெளியேறினார். இதன்போது அவரின் ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். பின்னர் அவர் தங்காலையில் உள்ள அவரின் இல்லத்துக்கு சென்றதுடன் அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு – விஜேராம இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நாள் முதல் குறித்த விடயம் முக்கிய பேசுபொருளாக உள்ளது.
இதேவேளை, தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியேறியுள்ளார்.
குறித்த இல்லம் கொழும்பு ஹெக்டர் கொப்பேக்கடுவ மாவத்தையில் அமைந்துள்ளது.
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.