மட்டக்களப்பு – குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (11) நேரில் சென்று பார்வையிட்டனர்.
1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை, இன்று நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் தொல்பொருள் திணக்களத்தினர், சட்டத்தரணிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், பொலிஸார், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தடயவியல் பொலிஸார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு ஏற்கனவே களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.