எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சிகள் தொடர்கின்றன…

நாட்டின் தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பாரானால், அது நாட்டுக்கு நல்லது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம், காலம் பார்த்து அறிவிப்பார்.
ஆனால், இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதுவரை இடம்பெறவில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கூட்டு எதிர்க் கட்சிகளின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சியும் அதில் கலந்துகொண்டு, கூட்டாக செயற்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவை இந்த மாதம் 20ஆம் அல்லது 21ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஓரிரு தினங்களில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.