2027இற்குள் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

காணாமல் போனோர் அலுவலகத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்வதற்கான விசேட கருத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காத ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்கும் பணி இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுவரை குறித்த அலுவலகத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக 10,517 முறைப்பாடுகள் நிலுவையில் உள்ளன. அதற்கமைய, இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காக ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட 75 தகுதியான நபர்களைக் கொண்ட 25 உப குழுக்களை நியமிப்பதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.