சம்பூர் மனித புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை சம்பூர் மனித புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழி அகழ்வுக்கான பாதீட்டுக்குரிய அனுமதி கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த வழக்கை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மூதூர் நீதிவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பூரில் மனித புதைகுழி காணப்படுவதாக கூறப்படும் பகுதியில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான பாதீடு, பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி, தொல் பொருள் திணைக்களத்தின் பிரதிநிதி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி ஆகியோரின் கையொப்பத்துடன் குறித்த பாதீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார். சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கரையோர பகுதியில் கடந்த ஜுலை மாதம் 20ஆம் திகதி மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.