அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் இன்றைய பங்காண்மையானது கடல்சார் மரபினைத் தொடர்கிறது. எமது நாடுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றும் நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம் என அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவித்தார்.
மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் பிரிவுடன் இணைந்து (MAU), அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோர் கொடவாய கப்பற் சிதைவு தொடர்பான கண்காட்சியினை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில்( BMICH ) ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கடல்சார் மரபுரிமையென்பது தொடர்புகள் பற்றிய ஒரு கதையாகும். அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் இன்றைய பங்காண்மையானது அந்த மரபினைத் தொடர்கிறது.
துறைமுகங்கள் முதல் மக்கள் வரை, பாதுகாப்பினைப் பேணுவதற்காகவும், திறந்த வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், எமது நாடுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றும் நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம். பல நூற்றாண்டுகளாக பாதுகாப்பான கடற் பாதைகள் செழிப்பின் உந்துசக்தியாக இருந்துள்ளன என்பதையும், அவை அமெரிக்காவினதும் இலங்கையினதும் நலன்களுக்கு இன்றியமையாதவையாக விளங்குகின்றன என்பதையும் கொடவாய கப்பற் சிதைவு நினைவூட்டுகிறது.” எனக் குறிப்பிட்டார்.