2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல், தற்செயலான சம்பவங்கள் அல்ல. அவை குற்றங்கள் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் குற்றங்கள் வாழ்வதற்கான உரிமை, குடும்ப ஒற்றுமைக்கான உரிமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை வேண்டுமென்றே மீறும் செயலாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, இவற்றை மறுப்பதோ அல்லது அவர்கள் சார்பாக செய்ய வேண்டிய பணிகளை தாமதப்படுத்துவதோ அரசின் பங்கு அல்ல என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மாறாக நாட்டின் அரசு அதனை அங்கீகரித்து செயற்பட வேண்டும். இதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம், நல்லிணக்கம் மற்றும் நீதியை, கொள்கை அறிக்கையின் மையத்தில் வைத்துள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.



