அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும், அது நீதிமன்றத்தின் சுயாதீன செயற்பாடு என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அது குறித்து விளக்கமளித்துள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாரையும் கைது செய்வதா? அல்லது அவரை விளக்கமறியலில் வைப்பதா? என்பது குறித்து தானோ அல்லது அரசாங்கமோ தீர்மானிப்பதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், எதிர்தரப்பினர் அனைவரும் ஓர் அணியில் இணைவார்கள் என்பதை அறிந்திருந்த நிலையில், குறித்த கூட்டணியால் அரசாங்கத்திற்கு எவ்வித சவாலையும் ஏற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
யாரேனும் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுமாயின் அது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் எடுக்கும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அத்துடன், இங்கு யாருடைய ஜனநாயக உரிமையும் பறிக்கப்படவில்லை எனக் கூறிய அமைச்சர், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளுக்கு அமையே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

கொள்ளையடித்து, ஊழல் செய்வோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுப்பதை, ஜனநாயக உரிமை மீறப்படுவதாக கூற முடியுமா? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.அத்துடன், இந்த கைது ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ முன்னெடுத்த நடவடிக்கை அல்ல என்றும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை புரிந்துகொள்ள முடியாது எனின், எதனையும் செய்ய முடியாது என்றும், அரசியல் பழிவாங்கலை முன்னெடுத்திருந்தால் அதனை நீதிமன்றத்திடம் எடுத்துரைக்க முடியும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால வலியுறுத்தியுள்ளார்.