முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுடன் அவர் மருத்துவமனைக்கு வருகை தந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்க, தனது நோய் குறித்தும் ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்தும், நேற்று (24) சமூக ஊடகங்களில் இதயபூர்வமான கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை தனது கட்சியினரும், சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களும், இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருந்து ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றிருந்த மூத்த அரசியல்வாதிகளிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமையை வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்க, அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தங்களுக்காக ரணில் விக்கிரமசிங்க, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கட்சித் தலைவர்கள் நேற்று (24) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து எதிர்க்கட்சியினரின் முனைப்புக்களுக்காக அவரது ஆதரவைக் கோரினர்.
இதனையடுத்து, நேற்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தநிலையில் இன்று (25) கொழும்பு வரும் அமெரிக்க பிரதிநிதிகள் குழுவையும் ஐக்கிய தேசியக் கட்சியினர் சந்திக்கின்றனர்.
சில முக்கிய சர்வதேச மனித உரிமைக் குழுக்களும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதற்கான விபரங்களைக் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.