கோத்தபாயாவின் வெற்றியை தொடர்ந்து எழுந்துள்ள ஊகங்களும், நிதர்சனமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

271
87 Views

கோத்தபாயாவின் வெற்றியை தொடர்ந்து எழுந்துள்ள ஊகங்களும், நிதர்சனமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சிறீலங்காவின் தேர்தல் முடிவுகள் அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ள அதேசமயம், பூகோள ஆதிக்க சக்திகளின் ஒழுங்கமைப்பிலும் சிக்கலான நிலையை தோற்றுவித்துள்ளது போன்ற தோற்றப்பாடுகள் எழுந்துள்ளன.

இந்த தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் தமிழினம் எதனையும் பெற்றுவிட முடியாது என்பதை நாம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் மூலம் கண்டிறிந்தோம். மகிந்த ராஜபக்சாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மைத்திரி –ரணில் தலைமையிலான நல்லாட்சி ஒன்றை அமைப்பதன் மூலம் தமிழ் மக்கள் தீர்வைப் பெற்றுவிடலாம் என்ற போலியான விம்பம் ஒன்று தமிழ் மக்களின் முன்னால் உருவாக்கப்பட்டது.

மேற்குலகம் சார்ந்த இந்த நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களை ஏமாற்றுவதில் தமிழ் அரசியல் வாதிகளும் ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள், தமது துன்பங்களுக்கு விடிவுபிறக்கும் என நம்பிய தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களிப்பில் ஈடுபட்டனர், 2010 ஆம் ஆண்டு 25 விகித வாக்களிப்பை கண்ட யாழ்மாட்டத்தில் 2015 ஆம் ஆண்டு 66 விகிதமாக அது உயர்ந்தது.

தமிழ் மக்களின் இந்த வாக்களிப்பின் முக்கிய நோக்கம் இனப்படுகொலையில் முக்கிய பங்குவகித்த மகிந்தவை பழிவாங்குதல், புதிய அரசின் மூலம் தமக்கான ஒரு தீர்வை காண்பது என்பவையே, ஆனால் மகிந்தாவை தூக்கியெறிந்த எம்மால் தீர்வை புதிய இனவாத அரசிடம் இருந்து பெறமுடியவில்லை.

இந்த நிலையில் தான் சிங்களத் தலைவர்கள் எல்லோரும் இனவாதத்தில் மூழ்கியவர்களே எனவே அவர்களை நம்பமுடியாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பது அல்லது தமிழர் ஒருவருக்கு வாக்களிப்பது என்ற திட்டம் முன்வைக்கப்பட்டது.

ஆனால் தேர்தலில் கோத்தபாயா களமிறங்கியது தமிழ் மக்களை மீண்டும் பழிவாங்கும் நிலைக்கு தள்ளியதுடன், அவர் அரச தலைவரானால் மீண்டும் ஒரு போர் உருவாகும் என்ற அச்சமும் எதிர்த்தரப்பால் தமிழ் மக்களின் மனங்களில் விதைக்கப்பட்டது. பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் கொழும்பில் உள்ள தமிழ் மக்களின் சொத்துக்கள், வர்த்தகங்கள் பாதிக்கப்படும் என்ற தகவல்களும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

எனவே புறக்கணிக்பை கைவிட்ட தமிழ் மக்கள் கோத்தபாயாவை தோற்கடிக்க வேண்டும் என்ற மன நிலைக்குத் தள்ளப்பட்டனர். 2015 ஆம் ஆண்டு போலவே வாக்களிப்பில் கலந்து கொண்டனர், சிங்களவர் ஒருவருக்கு வாக்களிக்க மனம் விரும்பவில்லை என்றாலும், அவர்களின் மனங்களில் விதைக்கப்பட்ட அச்சமும், மகிந்த குடும்பத்தின் மீது கொண்ட தீராத பகையும் மற்றுமொரு சிங்களவருக்கு வாக்களிக்க மக்களைத் தூண்டியது. 2019 ஆம் ஆண்டின் வாக்களிப்பு விகிதம் 68 விகிதமாக யாழில் பதிவாகியது.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்திலேயே குறைவாவன விகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏறத்தாள 30,000 செல்லுபடியான வாக்குகளே அதிகம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்புடன் இதனை ஒப்பிட்டால் அதிலும் பல சிக்கல்கள் தோன்றலாம்.

அதாவது தமிழினம் அச்சம் மற்றும் பழிவாங்கும் படலம் போன்ற சிந்தனைகளில் மூழ்கி தனது இறைமையயும், பூகோள பிராந்தியத்தில் கொண்டிருந்த தனித்துவத்தையும் இழந்து நிற்கின்றது. ஏனெனில் சிங்களத் தலைவர் ஒருவருக்கு தமிழ் மக்கள் இவ்வளவு பெருமளவில் வாக்களித்தது இதுவே முதல்முறை என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட த ரெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆனால் சிங்கள இனம் மறுவளமாக நிமிர்ந்து நிற்கின்றது அதாவது தனது இனத்தை ஆபத்துக்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் மக்கள் சரித்திரம் படைப்பார்கள் என்பதற்கு அவர்களின் ஒற்றுமையும், செயற்பாடும் ஒரு எடுத்துக் காட்டாகும்.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பொதுஜன முன்னனி என்ற கட்சி மூன்று வருடங்களுக்குள் வளர்ந்து 69 இலட்சம் வாக்குகளை அரச தலைவர் தேர்தலில் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சிங்கள மக்களின் ஒத்துழைப்புக்களும் அர்ப்பணிப்புக்களுமின்றி சாத்தியமற்ற ஒன்று.

இந்த பெரும் வெற்றி என்பது, அமெரிக்காவும், இந்தியாவும் கொண்டுவந்த 19 ஆவது திருத்தச்சட்டத்தை கைவிட்டு ஓடவேண்டிய நிலையை ரணிலுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தமிழின அழிப்பு போரின் உச்சக்கட்டமான 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போரின் பின்னர் 2010 ஆம் ஆண்டு பெரு வெற்றியீட்டிய மகிந்த ராஜபக்சா நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை பெற்று ஒருவர் அரச தலைவராக இருக்கலாம் என்ற 18 ஆவது திருத்தச்சட்டத்தை 2010 ஆம் ஆண்டு ஏப்பிரலில் கொண்டுவந்திருந்தார்.

ஆனால் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்காக நல்லாட்சி என்ற போர்வையில் மைத்திரிபால சிறீசேனாவும், ரணிலும் கைகோர்க்க வைக்கப்பட்டனர், மகிந்தாவின் 18 ஆம் திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டது, 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.

அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அரச தலைவரின் அதிகாரம் குறைக்கப்பட்டது. அமைச்சரவையின் அல்லது நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அரச தலைவர் பிரதமரை நீக்க முடியாது. அதாவது இரட்டை அதிகார நிலையைத் தான் 19 ஆவது திருத்தம் ஏற்படுத்தியிருந்தது.

தற்போதைய நிலையில் கூட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் ரணிலை கோத்தபாய நீக்கவோ அல்லது நாடாளுமன்றத்தைக் கலைக்கவோ முடியாது.

ஆனால் கோத்தா பெற்ற பெரும் வாக்குப்பலம் எதிர்த்தரப்பை மேதல்கள் இன்றி சரணடைவு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மிகப்பெரிய சிங்கள கட்சிக்கே இந்த நிலை என்றால் தமிழ் மக்களின் நிலை?

பூகோள அரசியலில் மாற்றம் ஏற்படலாம் என்கின்றனர் சிலர், கோத்தாவுக்கு எதிராக இந்தியா செயற்படும் என்ற தோற்றப்பாடுகளும் உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தின் அரசியல் பிரமுகர்களின் அறிக்கைகளும் தமிழ் மக்களை அவ்வாறு எண்ணத் தூண்டலாம்.

ஆனால் உண்மை எதிர்மறையானது என்பதே நிதர்சனம், 2018 ஆம் ஆண்டு மகிந்தா ராஜபக்சா தனது சகோதரர்கள், புதல்வர்கள் சகிதம் இந்தியா சென்று, இந்தியவின் ஆளும் மற்றும் எதிர்த் தரப்பு அரசியல் தலைவர்களையும், இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களையும், அவர்களின் ஊதுகுழலாகச் செயற்படும் சுப்பிரமணியன் சுவாமியையும் சந்தித்த பின்னரே 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசியல் கிளர்ச்சி ஒன்று தென்னிலங்கையில் நிகழ்ந்தது.
அது தோல்வியில் முடிந்ததும், வவுணதீவில் தாக்குதல் நிகழ்ந்தது, அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் கொழும்பில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கள் முற்றுமுழுதாக சிங்கள வாக்காளர்களை மகிந்தாவின் பக்கம் திருப்பிவிட்டுள்ளது.

சீனாவிடம் வாங்கிய பல ஆயிரம் கோடி கடன்களை அடைத்து அதனை இந்தியா மீட்டது போன்றதொரு செயல்த்திட்டமே வேறு வடிவத்தில் படிப்படியாக சிறீலங்காவில் அரங்கேறியுள்ளது. அதனைத் தான் த இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராமும் கூறியிருந்தார். அதாவது கோத்தபாய ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என்று.

அப்படியென்றால் அமெரிக்காவின் நிலை? சிறீலங்கா மீதான அமெரிக்காவின் தலையீட்டைப் பொறுத்தவரையில் இந்தியா ஒரு எல்லை வரையுமே அதனை அனுமதிக்கும். மிலேனியம் சலஞ் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி அமெரிக்கப் படையினர் சிறீலங்காவில் சுதந்திரமாக நடமாட இந்தியா அனுமதிக்குமா? என்பது கேள்விக்குறியானதே.

ஆனால் அமெரிக்காவின் கையில் கோத்தபாயாவும் அவரின் படையினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்ற ஆயுதம் உண்டு. அதனைக் கொண்டு அமெரிக்கா அவரைப் பணியவைக்குமாக இருந்தால் இந்தியா அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய நிலை ஏற்படும்.

அதற்கான அடித்தளம் தான் தமிழகத்தில் ஒலிக்கும் குரல்களின் பின்னனி. இந்து ராமும் அதனை மறைமுகமாக கூறிச் சென்றுள்ளார். அதாவது தமிழ் மக்கள் தமது அதிகாரப் பகிர்வை பெறுவதற்கு தொடர்ந்து போராடவேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here