பல்வேறு குற்றங்களுக்கு பொறுப்பானவருக்கு ஆதரவான கருத்துக்கள் கவலையளிப்பதாக அரசாங்கம் கருத்து

ரணில் விக்ரமசிங்க என்பவர், கறுப்பு ஜுலைக் கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டியவர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று(24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், ரணிலுக்கு எதிராக மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு இருக்கின்றதாகவும் இவ்வாறான நபரை பாதுகாக்கும் விததத்தில் கருத்து வெளியிடுவது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்றும் பலம் பொருந்தியவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க மட்டும் அல்ல, எப்படியான நபரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டே செயற்பட வேண்டும் என்றும் இந்த விடயத்தில் யாவருக்கும் விதி விலக்கல்ல என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.