முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் என சுட்டிக்காட்டியுள்ள கூட்டு எதிர்கட்சிகள், இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாவும் அறிவித்துள்ளன. கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஏற்பாடு செய்திருந்த ஊடகச்சந்திப்பு கொழும்பில் நேற்று (24) இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ், பாட்டலி சம்பிக்க ரணவக்க, நிமல் ஸ்ரீபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, தலதா அத்துகோரல, ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, ரவூப் ஹக்கீம், தயாசிறி ஜயசேகர மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு ரணில் விக்ரமசிங்வின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஊடக அறிக்கையை தலதா அத்துகோரல ஊடகங்களிடம் முன்வைத்தார். ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாகவும், இந்த கைதானது ஜனநாயகத்துக்கான தாக்குதலுக்கு சமமானது எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ரணிலுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கின்ற அரசியல் செயற்பாட்டை கடுமையாக எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.