வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு அடுத்த மாத ஆரம்பத்தில் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி குறித்த குழு இலங்கையில் இருந்து புறப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் கலந்து கொள்வதற்காக குறித்து குழு அங்கு செல்கிறது.
இதன்போது கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தை கோரவுள்ளதாக அரசாங்க தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நிலைப்பாட்டை இலங்கை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான மையக் குழு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஒரு புதிய பிரேரணையை முன்வைக்கவுள்ளது. எவ்வாறாயினும் குறித்த பிரேரணை இலங்கைக்கு சாதகமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம் கொண்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் முன்வைக்க உள்ள அறிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய உள்ளது. அதேநேரம் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை மையக் குழுவின் புதிய தீர்மானம் தொடர்ந்து வலியுறுத்தும் என அரச தரப்பு தகவல்கள் கூறுகின்றன. மறுபுறம் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இலங்கை தொடர்பான தீர்மானம் புதுப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.