குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கைவிலங்கின்றி நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
இதேவேளை ஜனாதிபதியொருவர் கைதுசெய்யப்பட்ட முதற்சந்தரப்பம் இதுவாகும்.
இலங்கையில் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவாகியிருந்தார். அவருக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க என பலர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.
தற்போது அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். ரணில் விக்ரமசிங்கவுக்கு முதல் பதவி வகித்த அனைத்து ஜனாதிபதிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் ரணில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.