தமிழர் தாயக பகுதியில் இடம்பெற்ற இன அழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
தாயகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் அரசியல் தரப்பினர்கள் உள்ளிட்டோரின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் பன்னாட்டு நீதி விசாரணை மாத்திரமே இறுதி தீர்மானமாக இருக்க வேண்டும் என பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்காவின் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தமது தாயகத்தில் ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் சுயாதீன நீதிப்பொறிமுறையின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் செயற்பாடுகள், முழுஅளவிலோ அல்லது பகுதியளவிலேனும் ஈழத்தமிழரை அழிப்பதற்கான நோக்கத்தைக் கொண்டிருப்பதுடன் அவ்வழிப்புத் தொடர்பான எந்தவொரு விசாரணையும் நடைபெறாதவாறு நுட்பமாகத் தடை செய்து வருவதும் இனப்படுகொலையாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1956 ஜூன் மாதம் ஸ்ரீலங்கா அரச ஆதரவுடன் சிங்களக் காடையர்களால் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்லோயாப் படுகொலைகள் என அறியப்படும் முதலாவது பாரிய இனவழிப்பு நடைபெற்ற நாளிலிருந்து, தம்மீது நடைபெற்ற குற்றங்களை விசாரிக்கும் பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை அமைக்கவேண்டும் என ஐக்கிய நாடுகளிடம் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்பொறிமுறையின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நீண்டநாளாகத் தொடரும் வேதனையினைத் தீர்க்கவும் காணாமலாக்கப்பட்டவர்களின் விதியை அறிந்துகொள்ளவும் முடியும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விசாரணையில் இலங்கை அரசின் பங்கு இருந்தால் அது பாரபட்சமானதாகும்.
ஏனெனில் அரசும் அரசுடன் தொடர்புடையவர்களுமே குற்றங்களை நிகழ்த்தியவர்களாக குற்றஞ்சாட்டப்படுபவர்களாக இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு, எந்தவொரு வகையிலும் பன்னாட்டு விசாரணைக்கு எதிராகவே இருப்பதுடன் ஈழத் தமிழர்களின் மீது தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை நிகழ்த்தும் இடைவிடாத திட்டமிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் தாயகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.