இராமேஸ்வர கடற்றொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது…

எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி 8வது நாளாக இன்றும் (19) இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு இரயிலை தங்கச்சிமடத்தில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, தங்கச்சிமடத்தில் 859 பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மத்திய அரசு அசமந்த போக்கை காட்டுவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் குற்றம் சுமத்தினர்.அத்துடன், இன்று வரை முன்னெடுத்துள்ள போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அனைத்து கடற்றொழிலாளர்களையும், ஒன்றிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரியளவான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.