ஜனாதிபதி, மன்னார் மறைமாவட்ட ஆயருடன் கலந்துரையாடல்

மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் கனியமணல் அகழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும், மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மறைமாவட்ட ஆயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன்போது, மறைமாவட்ட ஆயரினால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவை தொடர்பில் உரிய அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  நேற்று (19) 17ஆவது நாளாகவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அதன்போது எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு குறித்த திட்டத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும், தமக்கான உரிய தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து, மன்னார் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.