சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கைக்கு பல பரிந்துரைகள் முன்மொழிவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கத்துக்கு சில பரிந்துரைகளையும் குறித்த அமைப்பு முன்மொழிந்துள்ளது. ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் கழிந்துள்ள போதிலும், மனித உரிமைகள் பிரச்சினையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக கடுமையான உரிமை மீறல்களும், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளும் தொடர்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டுள்ள புதிய அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து கருத்துரைக்கின்ற போதிலும் போர் கால குற்றங்களை சரியான முறையில் நிவர்த்திப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இதன்படி, சர்வதேச சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றங்களின் சாட்சியங்களை சந்திக்கவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கம், தேர்தல் காலத்தில் உறுதியளித்தப்படி, சட்டமா அதிபர் அலுவலகத்தில் இருந்து தனியாக விலகி பொது வழக்கு விசாரணைக்கான வழக்கு தொடுநர் அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு முந்தைய உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்களால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை பயன்படுத்த வேண்டும். ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் நியாயமானதும் முழுமையானதுமான விசாரணையை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்; வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் உண்மை மற்றும் நீதிக்காக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பாதுகாப்பு படைகளின் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக உள்ள மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தொழில்நுட்பகளை ஏற்றுக் கொள்வதுடன் மரபணு பரிசோதனையை நடத்தி, மனித எச்சங்களை அடையாளம் காண வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படும் நபர்கள் மீது வலுவானதும் சுயாதீமானதுமான குற்றவியல் வழக்குகளை தொடர வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இவை தவிர, பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி, உறுதியளித்தவாறு அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புதிய பயங்கரவாத எதிர்ப்;புச் சட்டம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் பரிந்துரைத்துள்ளது.