இலங்கையை இன்னமும் கண்காணிப்பது அவசியம்!

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கட்டமைப்பு ரீதியான காரணிகள் இன்றும் தொடர்வதை ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் அவசியத்தை இந்த அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப்பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-
அடுத்த மாதம் ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக ஒரு கவலைக்குரிய சித்திரத்தை முன்வைப்பதுடன், சர்வதேச சமூகம் ஏன் இலங்கை விடயத்தில் தனது கண்காணிப்பைத் தளர்த்தக்கூடாது என்பதற்கான ஓர் எச்சரிக்கை மணியாகவும் உள்ளது.

ஐ.நா. அறிக்கை குறிப்பிடும் கட்டமைப்பு ரீதியான காரணிகள் தற்காலிகப் பிரச்சினைகள் அல்ல. அவை நாட்டின் நிர்வாக சட்ட மற்றும் பாதுகாப்பு இயந்திரங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள நீண்டகாலப் பிரச்சினைகளாகும். சர்வதேசக் கண்டனங்கள் இருந்த போதும், தன்னிச்சையான கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் வழிவகுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை.

போர்க்குற்றங்கள் மற்றும் பெரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது நம்பகரமான விசாரணைகள் இன்றி, அவர்கள் தொடர்ந்தும் பதவிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளனர். கடந்தகால மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகள் இல்லாமை மற்றும் உள்நாட்டு நீதிப்பொறி முறைகள் தோல்வியடைந்தமை என்பன சர்வதேசத்தின் தலையீட்டை வலியுறுத்துகிறன.

ஐ.நா. ஆணையாளரின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் என்பது, இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் பெரும் மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து, பாதுகாத்து, பகுப்பாய்வு செய்யும் ஒரு சர்வதேசப் பொறிமுறையாகும். இலங்கை இத்தகைய சர்வதேசப் பொறிமுறைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து, நாட்டின் இறைமையில் தலையிடுவதாகக் குற்றம் சுமத்துகிறது.

எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான ஒரு புதிய தீர்மானத்தின் மூலம் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், அதன் ஆயுள்காலத்தை நீடிக்கவும் சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வலுப்படுத்துகிறது. இலங்கையின் கட்டமைப்பு மாறாத வரை, சர்வதேசத்தின் கண்காணிப்பும் தளரக்கூடாது – என்றார்.