முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் அரசாங்க தரப்பு மீண்டும் விளக்கம்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை திரிபுபடுத்தி சில தரப்புகள் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதாகவும், இதனை அரசு வன்மையாக கண்டிக்கிறது என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அரசாங்கம் தகவல் திணைக்களத்தில்  நேற்று (17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒட்டுச்சுட்டான் பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குள் கடந்த 7ஆம் திகதி 5 பேர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.

அதன்போது, அங்கிருந்த சில சிப்பாய்கள் அவர்களை தாக்கி, அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
குறித்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடிய போது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார். இவர்களை விரட்டிய மற்றும் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 3 இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி தவறான தகவல்களை வழங்கி, சில அரசியல் குழுக்கள் வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது என்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அவர்கள், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.சிலர் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக தவறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இராணுவ முகாமில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான பீ அறிக்கையையும் ஒட்டுச்சுட்டான் பொலிஸார் தயாரித்துள்ளனர். சந்தேகநபர்களுக்கு தற்போது, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விரைவில் மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

இந்தநிலையில், கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த சம்பவத்தை அதனுடன் தொடர்புபடுத்தி மக்கள் மனதில் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கு, சில குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் கண்டிக்கிறது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, இராணுவம் சார்பில் இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்தார். முத்தையன்கட்டு முகாமிற்குள், நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாகவும், இராணுவ முகாமுக்குள் நுழைந்து திருட முயன்றமை தொடர்பில், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. எனினும், மற்றொரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைக்கு பக்கசார்பின்றி இராணுவம் ஆதரவளிக்கும் என்றும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.