இலங்கையில் இடம்பெறும் அனைத்து மீறல்கள் மற்றும் பழிவாங்கல்கள் என்பவற்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பில் உள்ள பொறிமுறைகளும், உறுப்பு நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகமும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஊடகவியலாளர் கணபதிபிள்ளை குமணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஊடக உரிமைகள் குழுக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக போர் தொடர்பான குற்றங்கள் குறித்து வெளிப்படுத்தப்படும் போது அதனை அடக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் பொறுப்புக் கூறல், நீதி என்பன வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழ் ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துஷ்பிரயோகம் மற்றும் உரிமை மீறல்கள் என்பன தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்களை தண்டிக்கவும் அவர்களின் பணியை தடுக்கவும் முயற்சிகள் இடம்பெறுவதாக 8 சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஊடக உரிமைகள் குழுக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.