கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபை கேட்போர் கூட்டத்தில் நேற்று (14.08.2025) பிற்பகல் 2:30 மணியளவில் தென் இலங்கையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களுமான தரிந்து ஜெயவர்தன, தரிந்து உடுவரகெதர, எம்.எப்.எம் பசீர் ஆகிய மூவரும் இணைந்து எழுதி வெளியீடு செய்த செம்மணி எனும் ஆவண நூல் வெளியிடப்பட்டது.
சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியிருக்கின்ற செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற இவ்ளையில் செம்மணி எனும் பெயரிலே அந்த செம்மணியில் நடந்த கொடூரங்களை விபரிப்பதாக இந்த புத்தகம் ஒரு ஆவணமாக ஆக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தென் இலங்கை இளைஞர்கள் எடுத்திருக்கிற இந்த முயற்சி தமிழர் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு தொடர்பான விழிப்புணர்வு தென் இலங்கை மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவிருக்கின்ற முதல் படியாக பார்க்கப்பட வேண்டியிருக்கிறது.
இந்நிகழ்வில் இந்நூல் தொடர்பாகவும்,செம்மணி,மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலும் கலந்துரையாடல்களையும் நடாத்தியிருந்தனர் இதில்ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணிகள்,ஊடகவியலாளர்கள்,அரசியல் பிரமுகர்கள்,கல்வியியலாளர்கள்,தொழிற்சங்கப் பிரதிநிதிகள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மனித உரிமைப் பாதுகாவலர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், என பலரும் தென்னிலங்கையில் இருந்து கலந்து கொண்டிருந்தனர். அம்பாறையில் இருந்து மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததோடு சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை விரைவில் தமிழிலும் மொழிபெயர்ப்புச் செய்யவும் இந்நூலிலுள்ள விடயங்களைப் பகுதி பகுதியாகத் தாமும் தமிழில் தொகுத்து வெளியிடவுள்ளதாவும் இதுபற்றி நூலாசிரியர்களில் ஒருவரான தரிந்து உடுவரகெதரவும் தம்முடன் பேசியதாகவும் கூறினார்.