சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker turk) கடந்த 13ம் திகதி வெளியிட்ட அறிக்கை குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போதைய அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல விடயங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்குவதாகக் கூறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானாவை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனந்த விஜேபால கூறினார்.
அசாத் மௌலானா மாத்திரமல்லாது, சாட்சியம் வழங்க தயாராகவுள்ள அனைவருக்கும் தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்துரைத்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச விசாரணைக்கான தேவை ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்த போது, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார். இதன்படி, செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் உள்ளக விசாரணையின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே, முல்லைத்தீவு முத்தையன்கட்டு இளைஞரின் மரண தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால, குறித்த இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறுவதாகக் கூறினார். அதற்கமையவே, 3 இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இராணுவ முகாமில் இரும்பு திருடுவதற்கு வருகை தந்த இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
அதற்கமைய, இராணுவத்தினரே அவர்களை அழைத்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார். எனினும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அந்த சம்பவம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.