யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் ஏற்கனவே அகழ்தெடுக்கப்பட்டுள்ள என்புக் கூடுகளின் அளவை ஒத்த என்புக்கூடுகள், மேலும் இருக்கலாம் என்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வுகளின் அறிக்கையை அடிப்படையாக வைத்தே இந்த விடயம் நீதிமன்றத்திற்கு நேற்று (14) தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி மனிதபுதைகுழி வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மண் பகுப்பாய்வு மற்றும் ஸ்கேன் ஆய்வு அறிக்கைகள் ஆகியன சட்ட வைத்திய அதிகாரியால் மன்றில் சமர்பிக்கப்பட்டன.
இந்த நிலையில் சட்ட வைத்திய அதிகாரி மேலும் 08 வாரங்களுக்கு குறித்த புதைகுழிகளை அகழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, அதற்கான நிதி உள்ளிட்ட ஏனைய ஒழுங்குகளை உரியவாறு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகம் சுத்தப்படுத்தப்படவுள்ளதாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்றைய நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதேநேரம், சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வானது, மரண விசாரணையாக கருதி முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமைய, மீட்கப்படும் என்புக்கூடுகள் யாருடையவை என்பதை அடையாளப்படுத்துவது முக்கியமான விடயம்.
அந்தவகையில், அகழ்வுப் பணிகளுக்கு இலங்கையில் நிபுணத்துவம் காணப்படுகின்ற போதிலும், சடலங்களை அடையாளப்படுத்தும் நிபுணத்துவம் இல்லை என்பதை தாம் மன்றுரைத்ததாக சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
சடலங்களை அடையாளம் காண்பதற்கான நிபுணத்துவம் இல்லை என்பதால் அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி அறிக்கை பெறுவது தொடர்பிலும் சமர்ப்பணம் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஏற்கனவே மன்னார் மற்றும் மாத்தளை மனித புதைகுழிகளில் மீட்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட என்புக்கூடுகளுக்கான அறிக்கைகளின் நிலவரங்களையும் தாம் சுட்டிக்காட்டியதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனுப்படுகின்ற என்புக்கூடுகள் எந்த நாட்டின் ஆய்வுகூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன? அதுவரையிலும் அந்த என்புக்கூடுகள் யாருடைய கட்டுக்காவலில் வைக்கப்படுகின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டும் என்பதையும் தாம் மன்றுரைத்ததாக சட்டத்தரணி சுமந்திரன் கூறியுள்ளார்.
இதேவேளை, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தக்கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நீதிமன்றம் இன்று திகதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.