பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்தும் சுதந்திர பலஸ்தீன் இராச்சியம் ஒன்றை பிரகடனப்படுத்துமாறு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (15) ஏற்பாடு செய்துள்ள பேரணியில் இலங்கையா்களாக அனைவரும் ஒன்டுபட வேண்டுமென பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தினர்.
கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர். கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
அங்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மெளலவி அர்கம் நூர் ஹாமித் கருத்து தெரிவிக்கையில்,
பலஸ்தீனுக்கு ஆதரவளித்துவரும் அமைப்புகள் ஒன்றிணைந்து பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் என்ற பெயரில் வரும் வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து அமைதிப்பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.
பொரளை மயானத்துக்கு அருகில் இருந்து மாலை 3மணிக்கு பேரணி ஆரம்பித்து கெம்பல் வாகன தரிப்பிடம் வரை செல்லவுள்ளது.இந்த பேரணியில் இன, மத பேதமின்றி இலங்கையார்களாகிய எமக்கும் இதயம் இருக்கிறது என்பதனை உலக்கு காட்டுவதற்கு நாங்கள் அனைவரும் இதில் கலந்கொள்ள வேண்டும்.
உலகில் மனித படுகொலைகள் இடம்பெறுவதை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும். இஸ்ரேல் எந்த சர்வதேச சட்டத்தையும் மதிக்காமல் அங்கு இனப்படுகொலை செய்துவருகிறது. இதுவரை 18ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
உலகில் எவருக்கு அநீதி ஏற்பட்டாலும் அதற்காக நாங்கள் எங்களால் முடிந்த வகையில் அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும். அதுதான் மனிதாபிமானமாகும். பலஸ்தீனில் யுத்தம் இடம்பெறுவதில்லை. அங்கு பாரிய அநியாயமே இடம்பெறுகிறது.
தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் சுதந்திரத்துக்காக போராடி வெற்றிபெற்ற நெல்சன் மண்டேலா தெரிவித்த ஒரு விடயம் தான், எமக்குரிய சுதந்திரம் பலஸ்தீன் இராச்சியம் சுதந்திரமடைந்த பிறகாகும் என்றார்கள்.
பலஸ்தீனில் கடந்த இரண்டு மாதங்களாக அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் பலஸ்தீனில் இடம்பெறுவது யுத்தத்துக்கும் அப்பாலானதொரு விடயமாகும். எனவே இந்த நாட்டில் வாழக்கூடிய அனைத்தின மக்களும் அரசியலுக்கு அப்பால், பலஸ்தீன மக்களுக்காக குரல்கொடுக்க ஒன்றிணைய வேண்டும் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த, சமூக செயற்பாட்டாளர் லயனல் பீரிஸ் தெரிவிக்கையில்,
பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் படுகொலையை கண்டித்து உலக நாடுகள் இஸடரேலுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றன.மக்கள் வீதிக்கிறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கையா்களாகிய நாங்களும் பலஸ்தீனுக்கு ஆதரவளித்து வரும் நாடுகளுடன் ஒன்றிணைந்து எமது ஆதரவை தெரிவிக்க வேண்டும். அதற்காக 15ஆம் திகதி இன, மத பேதமின்றி அனைவரும் இந்த பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேநேரம் இஸ்ரேலின் செயற்பாடுகள் எமது நாட்டில் அதிகரித்துள்ளன. தற்போது இலவச வீசா வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ரேல் மக்கள் சுற்றுலா பயணிகளாக எமது நாட்டுக்கு வருவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால்இந்த இலவச விசா மூலம் பலஸ்தீனில் படுகொலைகளை செய்துவரும் இஸ்ரேல் இராணுவத்தினர், தங்களின் மனு அமைதிக்கான இடமாக இலங்கையை மாற்றிக்கொண்டுள்ளனர். அவர்கள் இலங்கையில் அறுகம்பை போன்று பிரதேசங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரேல் இராணுவத்தினர் குறிப்பிட்ட காலம் இலங்கையில் தங்கி இருந்து, மீண்டும் இஸ்ரேலுக்கு சென்று படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். அதனால் இஸ்ரேல் இராணுவத்துக்கான அடைக்கலமாக இலங்கையை மாற்றிக்கொள்வதற்கு இடமளிக்கக்கூ்டாது என்றார்.
சுதந்திர பலஸ்தீன் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஹுசைன் ஷாமில், சமூக இளைஞர் குடும்ப அமைப்பாளர் எம்.,இர்ஷாத் மற்றும் சிவில் அமைப்புகளைச்சேர்ந்த பலவரும் இங்கு கலந்துகொண்டு, 15ஆம் திகதி இடம்பெறும் அமைதிப்பேரணியில் இலங்கையாளர்களாக நாங்கள் அனைவரும் கலந்துகொண்டு, பலஸ்தீன் மக்களுக்கான எமது ஆதரவை தெரிவிக்க முன்வரவேண்டும் என்றனர்.