முல்லைத்தீவு பழைய நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் உட்பட தொல்லியல் பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் புதிய பெயர் பலகை எதனையும் நிறுவக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொக்கிளாய் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, முல்லைத்தீவு நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
முல்லைத்தீவு பழைய நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த 11ம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் குறித்த உற்சவத்தின் இறுதியில் புதிய பெயர் பலகை ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த செயற்பாடு அந்த பகுதியில் வேறு மத வழிபாடுகளை மேற்கொள்கின்றவர்களுடன் முறுகல் நிலையினை உருவாக்கும் என்றும் அதனால் அமைதியின்மை ஏற்படும் என்றும் பொலிஸார் மன்றுரைத்துள்ளனர்.
எனவே, அங்கு புதிய பெயர் பலகை நிறுவுவதை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்றை பிறப்பிப்பிக்குமாறு கொக்கிளாய் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, நேற்றிலிருந்து 14 நாட்களுக்கு அமுலாகும் வகையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.