பிரதமரை பதவியிலிருந்து நீக்கும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக உதய கம்மன்பில கருத்து

பிரதமர் பதவியிலிருந்து ஹரிணி அமரசூரியவை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிப்பது குறித்து ஆளுங்கட்சிக்குள் உள்ளக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு நேற்று (11) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ஹரினி அமரசூரிய அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளை அமைச்சரொருவர் திருத்தியிருந்தார்.

பிரதமர் தவறான கருத்துகளை தெரிவித்திருந்தால் ஜனாதிபதியே அதனை திருத்த வேண்டும்.
எந்தவொரு நாட்டிலும் கனிஷ்ட அமைச்சரொருவர் பிரதமரின் கருத்துகளை திருத்திய வரலாறுகளை காணமுடியாது என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்போது ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஜே.வி.பியின் பிமல் ரத்நாயக்கவை அந்த பதவிக்கு நியமிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. எனவே,ஜே.வி.பியின் தலைவர்கள் ஹரிணி அமரசூரிய தொடர்பில் அவதூறுகளை பரப்பி, அவரை உளரீதியாக பலவீனமடையச் செய்து, தாமாகவே பதவி விலகும் நிலைக்கு அவரை கொண்டுவருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.