வடக்கு – கிழக்கு ஹர்த்தாலுக்கு மலையகத்திலும் ஆதரவு

மன்னாரில் 2 ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரக் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார் – பஜாரில் பொதுமக்களால் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 9ஆவது நாளாக  நேற்றைய தினமும் (11) மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
மன்னாரில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான இந்தப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், பல்வேறு பகுதிகளிலும் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக வடக்கு, கிழக்கிலுள்ள அரசியல் பிரதிநிதிகள், எதிர்வரும் 14ஆம் திகதி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

‘எமது நிலம், எமக்கு வேண்டும்’ எனும் தொனிப்பொருளில், இந்தப் போராட்டம் மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், மன்னார் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் விடயத்தில், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மன்னாரில் காற்றாலை மின்சாரத் திட்டங்கள், பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படுவதை எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மறுத்துள்ளார்.
இந்த பகுதி ஒரு பழமையான நிலம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

தாம், அந்தப் பகுதியைப் பார்வையிட்டதாக கூறிய அமைச்சர், அங்கு பறவைகளுக்கு ஆபத்து என்று கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லையென்று குறிப்பிட்டுள்ளார். இந்த இடம் மன்னாரிலிருந்து பூநகரிக்கு வடக்கே உள்ள பகுதி வெறும் பழமையான நிலம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் சில பிரிவினர் மன்னாரை, காற்றாலைகளால் அழிக்கப்படும் ஒரு ‘சொர்க்கம்’ என்று சித்தரித்துள்ளனர் என்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.