ஐ.நா.வின் 60வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் முன்வைக்கப்படும்!

அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று பிரித்தானியாவும் கனடாவும் அறிவித்துள்ளன. எனினும், அந்த தீர்மானங்கள், முன்னைய தீர்மானங்களுடன் ஒப்பிடும்போது மென்மையானதாக இருக்கும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தவிடயம் இலங்கை அரசாங்கத்திற்கு வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கை குறித்த முந்தைய தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியதால், இலங்கை குறித்த புதிய மையக் குழுவின் அமைப்பு மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் முன்னைய மையக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகியவை இந்த ஆண்டு தீர்மானத்தில் பங்கேற்காமல் போகலாம் என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது.

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Turk), 60வது அமர்வில் “இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை” குறித்த தனது அறிக்கையை முன்வைப்பார்.

திட்ட வரைவின்படி, அமர்வு தொடங்கும் நாளான, செப்டம்பர் 8ஆம் திகதியன்று இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் ஏற்கனவே செம்மணிப் புதைகுழியை பார்வையிட்டுச் சென்றுள்ளமையால், இலங்கை குறித்த தனது அறிக்கையில் முக்கியமாக அந்த புதைகுழி இடம்பெற வாய்ப்புள்ளது.

இதற்கிடையில் பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்கான உள்நாட்டு செயல்முறைவலுப்படுத்தப்படுவதையும் அரசியல் தலையீடு இல்லாததையும் உறுதி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைப்பது, உள்ளூர் பொறிமுறையின் மீதான சர்வதேச நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செம்மணிப் புதைகுழித் தளம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து, கருத்துரைத்துள்ள விஜித ஹேரத், இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மன்னார் மற்றும் மாத்தளை போன்ற பிற இடங்களிலும் இதுபோன்ற இடங்கள் உள்ளன, அத்துடன் அரசாங்கம் புதைகுழிகளைத் தோண்டி எடுத்து விசாரணைகளை நடத்த அனுமதித்துள்ளது.
எனவே இந்த விடயங்களில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துக்கொள்கிறது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்