வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை “இன மத பேதமின்மை” எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கமுடியாது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
நிலையான அரசியல் தீர்விற்கான 100 நாட்கள் செயல்முனைவின் மூன்றாம் வருடத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் வவுனியாவில் நேற்று (08) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அந்த குழுவினர் 1948இற்குப் பின்னரான இலங்கையின் 75வருடகால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கி காணப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏனைய தேசிய இனங்களான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை.
அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. மாறாக மொழிரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின என்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு “இன மத பேதமின்மை” குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையாகும்.
அந்தவகையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை “இன மத பேதமின்மை” எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது என்று அந்த குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.