மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதுமான செயன்முறைக்குத் துணையளிக்கக்கூடிய சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும், அவற்றின் இயலுமையை வலுப்படுத்துமாறும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரினால் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘இலங்கையில் உண்மை மற்றும் நீதியை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய மறுசீரமைப்புகள் தொடர்பில் நாம் பல தசாப்த காலமாக வலியுறுத்தி வருகின்றோம்’.
அந்த வகையில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் கடந்தகால வன்முறைகளுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனிதப்புதைகுழி விவகாரத்தில் தடயவியல் ஆய்வு உள்ளடங்கலாக அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் அதேவேளை, இவ்விடயத்தில் உண்மையைக் கண்டறிவதற்கும், நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் உரியவாறான நிபுணத்துவம் மற்றும் வளங்கள் என்பன உடனடியாகத் தேவைப்படுகின்றன.
அதற்கமைய மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதுமான செயன்முறைக்குத் துணையளிக்கக்கூடிய சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும், அவற்றின் இயலுமையை வலுப்படுத்துமாறும் கோருகின்றோம் என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.



