அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பழம்பெரும் தமிழ் கிராமமான திராய்க்கேணி எனும் தமிழர் பூர்வீகக் கிராமத்தில் 1990 ஆகஸ்ட் ஆறாம் திகதி காலை 7:00 மணி முதல் இரவு வரைக்கும் இலங்கை இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையும், தோழமையோடும் நட்புறவோடு வாழ்ந்த அயல் கிராமத்து முஸ்லிம்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காடையர்களும் இணைந்து கூரிய வாள், கத்தி ,கோடரி போன்ற ஆயுதங்களோடு வருகை தந்து படையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய திராய்க்கேணி பெரிய தம்பிரான் ஆலயத்திற்குள் ஒன்று கூடிய பொது மக்களை இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என்று வயது வித்தியாசமின்றி மிலேச்சத் தனம் மிக்கதான கொடூரத் தாக்குதலை மேற்கொண்டு சுமார் 54 உறவுகளை குற்றுயிரும் கொலையுயிருமாய் கொன்று ஒழித்தனர்.
எஞ்சிய உறவுகள் உயிரை காத்துக் கொள்ளக் காரைதீவு மண்ணை நோக்கி ஒடித் தப்பினர், சில பெண்கள் இந்த காடையர்களின் காமவெறி ஆட்டத்திற்கும் உள்ளானார்கள்.
இப்படியொரு மனித பேரவலத்தை நிகழ்த்திய நாளின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 06.08.2025 பிற்பகல் ஐந்து முப்பது மணி அளவில் இப்ப படுகொலை இடம்பெற்ற (இப்போது மாரியம்மன் ஆலயமாக காணப்படுகின்ற) ஆலய முன்றலில் அந்த உறவுகளில் 33 பேர் புதைக்கப்பட்ட இடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி அந்த உறவுகளுக்காகப் பிராத்தித்ததோடு அவர்களுக்கான நீதிக்காகவும் குரல் கொடுத்தனர்.
இங்கு கலந்து கொண்டிருந்த ஏற்பாட்டாளர்கள் சார்பில் செயற்பாட்டாளர் காந்தன், மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன், ஆலய நிருவாகத்தினர்,படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள்,திராய்க்கேணி எழுச்சி ஒன்றிய உறுப்பினர்கள்,இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட எங்கள் கண்மணிகளின் எலும்புக்கூடுகள் எழுந்து எமக்கும் சேர்த்து நீதி கேட்பது போல் திராய்க்கேணி படுகொலையில் கொன்று புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளும் எலும்புக்கூடுகளாய் எழுந்து விரைவில் நீதி கேட்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்தோம் எனவும் நீதிக்கான முயற்சிகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தையும் பெற்றுக் கொடுக்கத் தாம் முயற்சிப்பதாகவும் கூறியதோடு 35 ஆண்டுகள் கடந்து வாலியோடும் வேதனையோடும் வாழும் இந்த மக்கள் தமக்கு நடந்த அநீதிகளை இன்றுவரையும் வெளியில் சொல்ல அச்சப்படுவதையும் சுட்டிக்காட்டியதோடு இவ்வாறு அந்த மக்கள் இன்றும் அச்சப்படக் காரணமான பாதுகாப்புத் தரப்பு, இப்படுகொலையைப் புரிந்த காடையர்கள், புலனாய்வாளர்கள் தொடர்பிலும் அரசும் மனித உரிமையகமும்,சர்வதேசமும் அவதானிக்க வேண்டும் எனவும் கூறினார்.