நிலையான அரசியல் தீர்வுக்கான 100நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று (6) காலை அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் குறித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1948ஆம் ஆண்டுக்கு பின்னரான இலங்கையின் 75 வருடகால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கி காணப்படுகிறது. இலங்கை அரசானது சிங்கள பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களாலும் தலைவர்களாலும் இருந்து வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
1948 முதற்கொண்டு ஏனைய தேசிய இனங்களான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை.
அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்பட வில்லை. மாறாக மொழிரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின என்றும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.